Thursday, April 23, 2009

ஏமாற்றாதே, ஏமாறாதே

ஊமைக் கோபங்கள் வெளியே வந்துவிடக்கூடிய அளவுக்கு நம்மைத் தள்ளிவிடுகிறார்கள், நம்முடைய அரசியல்வாதிகள். நினைத்தபோதெல்லாம் பந்த் அறிவிப்பதும், இவற்றை அறிவிக்கவைத்துப் பின்னர் அவற்றைக் கபட நாடகம் என்று வர்ணிப்பதும் இங்கே அடிக்கடி நடக்கின்ற கூத்தாகிவிட்டது. மக்களைப்பற்றி யாருக்கும் கவலையில்லை. அவர்களும் ஒரு நாள் கிடைத்ததே என்று நாள் முழுவதும் டிவி பார்த்து, அறிவிக்கப்பட்ட பந்த்திற்குத் தங்கள் ஆதரவினை அள்ளித்தருகிறார்கள்!
ஒரு தொழிற்சாலையில் பணிபுரிபவனாக, நான் ஒவ்வொரு பந்த்திலும் பார்ப்பது இது: பந்த்திற்கு முதல் நாள் இரண்டு ‘கட்சித்தொண்டர்கள்’ (எப்போதும்!) மோட்டார் பைக்கில் வந்து, ஏதோ திருமணத்திற்கு அழைப்பு வைப்பது போல, மறுநாளைய பந்த் பற்றியும், நாங்கள் தொழிற்சாலையை மூடவேண்டிய அவசியம் பற்றியும் விளக்கிவிட்டுப் போவார்கள், நாங்களும் நல்ல குடிமக்களாக, மறுநாள் அநேகமாக விடுமுறை எடுத்துக் கொள்ளுவோம் (அல்லது, தைரியம் இருந்தால், ஷட்டரை இழுத்து மூடிக்கொண்டு, உள்ளே வேலை செய்வோம்). ஒருவேளை அன்று விடுமுறை எடுத்துக் கொண்டால், அடுத்து வரும் ஞாயிறன்று தவறாமல் வேலை செய்து எங்கள் சம்பளம் வருமாறு பார்த்துக்கொள்வோம்!
தவிரவும், அன்று ஒரு தொலைக்காட்சியிலும் சீரியலோ, சினிமாவோ வராமலில்லை. எப் எம் ரேடியோக்களும் கதறிக்கொண்டுதான் இருக்கின்றன. யாருக்காக, அல்லது யாரை ஏமாற்ற இந்த பந்த் சமாசாரங்கள்? ஒரு வேளை, சாமானியர்களை, புதிய புரட்சிக்குத் தயார்ப்படுத்தும் முயற்சிகளோ இவை?!

1 comment:

  1. இன்று எல்லாக்கடைகளும் மூடப்பட்டிருந்தாலும், குடிமக்களின் நலம் கருதி,அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டிருந்தன! வேறென்ன வேண்டும்?
    புதிய புரட்சியா?!நீங்க காமெடி,கீமெடி எதுவும் பண்ணலையே?
    please remove word verification.

    ReplyDelete