Wednesday, May 2, 2012

நாளை நமதே - 1953 பதிப்பு!


’நாளை நமதே’ என்றொரு தமிழ்த்திரைப்படம், எம்ஜிஆரும் லதாவும் நடித்து 1975ல் வெளிவந்து, வெற்றியைப் பெற்றது. அதில் எம்ஜிஆர் இரு வேடங்களில் நடிக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். அதற்கு முன் இந்தியில் வெளிவந்து, தமிழகத்திலும் மாபெரும் வெற்றிபெற்றிருந்த ‘யாதோந் கி பாரத்’ என்ற திரைப்படத்தின் கதையைத் தமிழுக்குகேற்ப மாறுதல்கள் செய்து உருவாக்கியிருந்தார் பிரபல மலையாள இயக்குனர் சேது மாதவன். இவை இரண்டிலும் அடிப்படைக் கதை, சிறு வயதில் பிரிந்து போன சகோதரர்களும் குடும்பமும் ஒரு ‘குடும்பப் பாட்டு’ மூலமாகக் கடைசியில் ஒன்று சேருவதுதான். (இப்படிக் கதை சொல்வதை, திரைப்பட மொழியில் ‘ஒன் லைன் ஸ்டோரி’ என்பர்) இருக்கட்டும்! இதற்கும் நமது தலைப்புக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? 1953ல் ‘என் வீடு’ என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரு திரைப்படம் வெற்றி பெற்றது. அதனுடைய ’ஒன் லைன் ஸ்டோரி’யும் அஃதே! எம்ஜிஆரின் படத்தைக் ’காப்பி’ என்று சொன்னால் கோபம் வந்துவிடுமோ என்ற பயத்தில் அதனுடைய ‘முதல் பதிப்பு’ என்று தப்பித்துக் கொள்கிறேன்! ‘நாளை நமதே’ படத்தில் அதே பல்லவியுள்ள பாடல் இன்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் விரும்பப்படுவது. நம்முடைய இன்றைய ‘என் வீடு’ படப் பாடலான ‘கொஞ்சு மொழி மைந்தர்களே’ என்ற பாடலும் படத்தில் இரண்டு/மூன்று முறை வரும். படத்தின் க்ளைமாக்ஸில், பிள்ளைகள் (சகோதரி உட்பட) பாடகர்களாகப் பிரபலமாகித் தாங்கள் நடத்தும் கச்சேரிகள் எல்லாவற்றிலும் கடைசிப் பாட்டாக இதைப் பாடுவார்கள். அதற்கு முன், தங்கள் தந்தையை எங்கு தேடியும் கிடைக்காததால், அவருக்குக் காணிக்கையாக இதைப் பாடுவதாக அறிவிப்பார்கள். க்ளைமாக்ஸ் ஆயிற்றே, படம் முடிய வேண்டாமா? தந்தை நாகையா ஆடியன்ஸில் உட்கார்ந்து, முகத்தில் சோகத்தையும் மகிழ்ச்சியையும் கலந்து, வரிக்கு வரி (உதடுகளால் மட்டும்!) தொடர்ந்து......இப்படியே போய் முடியும் அந்த ஸீனும், கதையும்! அந்தகாலத்தில் எங்கெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தத இந்த இனிமையான பாடல், ஏ.ராமராவ் என்கிற திறமையான இசையமைப்பாளர் கைவண்ணம். இந்தப் பாடலை, நமக்குத் தெரிந்த எம்.எல்.வசந்த குமாரியும், நமக்கு இதுவரை அறிமுகமாகாத டி.ஏ.மோதி என்ற பாடகரும் பாடியிருக்கிறார்கள். நீங்கள் ஒருவேளை சிவாஜி ரசிகராக இருந்தால், உங்களுக்கு மோதியை நினைவுபடுத்த முடியும்! ’சபாஷ் மீனா’வை மறந்திருக்க மாட்டீர்கள். அதில் சிவாஜியும், மாலினி என்ற நடிகையும் மழையில் உருண்டு புரண்டு, ‘காணா இன்பம் கனிந்ததேனோ’ என்று வட இந்திய இசையில் பாடுவார்களே, அதில் ஆண்குரல் மோதியுடையதுதான். அக்காலக் கதாநாயகர்கள் யாருக்குமே ஒன்றாத குரல் கொண்டிருந்ததால் இவர் அதிகம் ஜொலிக்கவில்லை. பின்னாளில் கிறித்துவப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். ‘கொஞ்சு மொழி மைந்தர்களே’ என்ற இந்த இனிமையான, அருமையான பாடல், கர்நாடக சங்கீத ராகமான ‘சாரங்கா’வைத் தழுவியது. எம்.எல்.வியின் மேல் ஸ்தாயி (ஸ்ருதி), மோதியின் (Bass) எனப்படும் கீழ்ஸ்தாயியுடன், பாடலின் தொடக்கத்திலிருந்தே கூடவே வரும் பியானோ கார்ட்களும் பாடலை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கின்றது. வாழ்க்கையில் அன்பே பிரதானம் என்று பரிந்துரைக்கும் ஒரு மிக நல்ல பாடலை ரசிக்க வாருங்களேன்!

4 comments:

 1. யப்பாடா! என்ன சார் இவ்ளோ காலம் கழிச்சி இப்ப இந்த விசயத்த வெளி உடுறீங்க? 1953ல கோமாவில விழுந்து இப்பதான் கண் விழுச்சி எழுந்து வர்ரீங்களான்னு சந்தேகமா இருக்கு ;-). நம்ம எம்மூஞ்சியாரு ஒரு சந்தர்ப்பவாத அல்டாப் பேர்வழின்னு எல்லார்க்கும் நல்லாவே தெரியும். ஆனா யாரும் அத வெளிய சொல்லிக்க மாட்டாங்க. அவ்வளவதுதான்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, மாசிலா அவர்களே! நான் 1975லேயே கோமாவிலிருந்து எழுந்ததனால்தானே இந்த விஷயமே தெரிந்தது! திரையுலகில் இப்படிப்பட்ட சமாசாரங்கள் ஏராளம்!

  ReplyDelete
 3. இன்றைக்கு 59 வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு படத்தின் பாடலை இப்போது கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் முறை கேட்கிறேன். அதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 4. எத்தனை வருடங்களானாலென்ன, வெங்கட் ஸார், நமது நோக்கமே இத்தகைய பாடல்களை ரசிப்பதுதானே? 1953 என்பது, திரைப் பாடல்கள் சுத்தமான கர்நாடக சங்கீததில் இருந்து மெல்லிசைக்கு மாறிக்கொண்டிருந்த காலம். நமமைப் போன்ற ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான காலம்! எனது மனத்தில் குடியிருக்கும் இன்னும் சில பாடல்களுண்டு. கிடைத்தால் எல்லோரும் கொண்டாடலாம்! வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, ஸார்!

  ReplyDelete