Saturday, May 12, 2012

இரண்டு புதிய குரல்கள்!


1949ம் வருடம் என்பது, தமிழ்த் திரைப்பட இசை, முழுமையான கர்நாடக சங்கீதத்திலிருந்து மெல்லிசை நோக்கி நகரத்தொடங்கிய காலமென்று கொள்ளலாம். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் நாடகக் கலைக்கு மிகுந்த வரவேற்பிருந்தது. பல் ‘பாய்ஸ்’கம்பெனிகள் ஊரூராகச் சென்று நாடகங்கள் நடத்தி வந்தனர். இவர்களைத்தவிர, ‘ஸ்பெஷல் நாடகங்கள்’ என்றும் ஒன்றிருந்தது. இவற்றில், எஸ்.ஜி.கிட்டப்பா, எம்.கே.தியாகராஜபாகவத்ர், பி.யு. சின்னப்பா, கே.பி சுந்தராம்பாள் இவர்களெல்லாம் தனியாகவும் ஜோடியாகவும் நாடகங்களில் நடித்துவந்தனர். இரவெல்லாம் நடக்கும் இந்த நாடகங்களில், எல்லா நடிகர்களுமே பாட்டுப் பாடி நடிப்பார்கள். பக்கவாத்தியங்களில், ’கால் ஹார்மோனியம்’ என்ற வாத்தியத்தில் இசைமேதை ஜி.ராமனாதன் போன்றவர்கள் நடிகர்களின் பாட்டுக்கு ஈடாகவும், போட்டியாகவும் இசைப்பார்கள். (நாம் பார்க்கும் ஹார்மோனியத்தில், ஒரு கையால் (‘Bellows') தனைக் காற்றை அழுத்தவும், இன்னொரு கையால் ‘கட்டை’களை வாசிக்கவும் பார்க்கிறோம். ஆனால், கால் ஹார்மோனியத்தில், இரு கால்களால் காற்றழுத்தம் கொடுத்து இருகை விரல்களாலும் கட்டைகளை வாசிப்பது. இப்போது இது அநேகமாக அருகிவிட்டது!) இவ்வகை நாடகங்கள், கதை, நடிப்பைப் பற்றிய கவலையில்லாமல், பாட்டுத் திறமையைக் காண்பிக்கவும் போட்டிகளுக்காகவும் மட்டுமே இருந்ததால் அடிக்கடி நடப்பதில்லை. அதனாலேயே திருவிழாக் கூட்டம் இவற்றிற்குச் சேரும். நமது இன்றைய பாட்டிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும், அந்தக் காலத்திய நிகழ்வுகளையும் பதிவிடும் நோக்கில் இதைச் சொல்லவந்தேன்! இதே 1949ல் சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவின் ‘பொன்முடி’ என்ற படம் வெளியானது. இதன் கதை, பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘பொன்முடி அல்லது எதிர்பாராத முத்தம்’ என்ற புத்தகத்தைத் தழுவியது. நரசிம்ம பாரதி, மாதுரிதேவி (கலைஞரின் ‘மந்திரிகுமாரி’ படக் கதாநாயகி - அந்தக் காலத்திலேயே சற்று ‘தைரிய’மான பெண் என்பதால் இவரை ‘ஒரு மாதிரி தேவி’ என்றும் கிண்டலாகச் சொல்வதுண்டு!) இவர்கள் நடித்திருந்தனர். இன்றைய நமது பாட்டைப் பாடியவர்கள் இருவருமே இங்கே புதிதாக வருகை தருகிறார்கள். ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருந்தும், இசைமேதையான ஜி.ராமநாதன், படங்களில் பாடியது மிகச்சில பாடல்களே! இவருடன், சற்றே ஆண்மை கலந்த இனிய குரல் வளமும் இசைத்திறனும் கொண்ட டி.வி.ரத்னம் பாடுகிறார். (இவர் ‘மனோகரா’ படத்திலும் பாடியிருக்கிறார்.) ’பொன்முடி’ படம், பெரிதாக வெற்றி பெறவில்லையானாலும் இன்றும் ரசிக்கும்படியான இந்தப் பாடலும், பாடியவர்களின் குரலும், ஒரே சீரான மெட்டும், பூரணமான துணையிசையும் இதோ இப்போது, உங்களுக்காக:

4 comments:

 1. என்னங்க உங்க தளத்துக்கு வந்தா ஜி.ராமனாதன்,கே.வி.மகாதேவன்,சுதர்சனம்,ராமராவ்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி இப்படி என்னென்னவோ பேரெல்லாம் சொல்றீங்க..இவங்கள்ளாம் யாரு? திரைஇசைக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம்? திரை இசைன்னா ஒரேயொருத்தர் அது இளையராஜா மட்டுமே இல்லையா? அவர் மட்டும்தானே பாட்டுப் போட்டிருக்கார்? அவர் மட்டும்தானே வாத்தியக் கருவிகள் வச்சி இசையமைச்சிருக்கார்? அவர் மட்டும்தானே பிஜிஎம் என்ற பின்னணி இசை வாசிச்சிருக்கார்? இதெல்லாம் விட்டுட்டு யார்யாரையோ சொல்றீங்களே.........இப்படி நெனைச்சுக்கிட்டிருக்கற நிறையப்பேர் நெனப்புல மண்ணள்ளிப் போடற வேலையைச் செய்யறீங்களே இது நியாயமா?

  ReplyDelete
  Replies
  1. ஐயா சாமீ, நீங்க சொல்றவரைப் பத்தியும், அவருடைய பாடல்களைத் தவிர மற்றவற்றை பற்றியும் சண்டை போட ஒரு பெரிய்ய்ய்ய குரூப்பே கச்சைகட்டி வேலைகள் செய்திட்டிருக்கு! உங்க வலைத்தளத்திலேயே அதுக்கு வேண்டிய கருக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே! வைகுந்தசாமி, மெய்வழிச் சாமி,ப்ரேமானந்தா, நித்யானந்தா, இவர்களுக்கெல்லாம் இடையில் ஒரு வள்ளலாரின் குரூப்பைப் போல, எங்களுக்குப் பிடிச்சதை ரசித்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறோம், நாங்கள்! வெறும் கூச்சலைவிட பாடல்கள் இனிமையும் சாந்தியும் உடையவை அல்லவா!

   Delete
 2. பதிவுகளிலேயே படிக்க மிகவும் கஷ்டமான பதிவு கருப்பு பேக்கிரவுண்டில் வெள்ளை எழுத்துக்கள்தான்.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி, திரு.பழனி.கந்தசாமி. விரைவிலேயே வேறு வடிவம் கொடுக்க முயற்சிக்கிறேன்.

   Delete