Friday, May 25, 2012

உன் மடியில் நானுறங்க,......



      தமிழ் நாடக வரலாறு என்பது, மிகவும் குறுகிய காலத்தில் நிகழ்ந்து, இன்று ஏறத்தாழ அழியும் நிலையினை அடைந்திருக்கிறது. தெருக்கூத்து வடிவிலிருந்து நாடக வடிவம் பெற்றதற்கு முக்கிய காரணகர்த்தா, சங்கரதாஸ் சுவாமிகள் எனும் துறவி. பல புராணக் கதைகளை நாடகமாக்கி ஒரு பெரும் புரட்சியை நடத்திக் காட்டினார். ( இவருடைய நாடகமொன்றில் பாடப் பெற்ற ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ பாடல், முதலில் இசைத்தட்டாகவும், பின்னர் திரைப்படத்திலும் கே. பி. சுந்தராம்பாள் மூலம் பிரபலமடைந்தது. சுவாமிகளின் நாடகத்தையும் நீங்கள் சாம்பிள் பார்த்திருக்கிறீர்கள். ஏ.பி.நாகராஜனின் ‘நவராத்திரி’ படத்தில், சிவாஜியும், சாவித்திரியும் அதிஅற்புதமாக நடித்து ஒரு தெருக்கூத்து வருமே, நினைவிருக்கிறதா? அது நாடகத்தந்தை எனப்படும் சங்கரதாஸ் சுவாமிகளுடைய படைப்புத்தான்!) அவருக்குப் பின்னர், பல பாய்ஸ் நாடகக் கம்பெனிகள், (நவாப் ராஜமாணிக்கம், கன்னையாபிள்ளை, டி.கே.எஸ் சகோதரர்கள், சக்தி கிருஷ்ணஸ்வாமி, என்.எஸ்.கிருஷ்ணன்) என்று உருவாகி, தமிழ்த் திரையுலகிற்கு ஏராளமான, அற்புதமான நடிகர்களை வழங்கின.

      இந்த வரிசையில், 1950/60களில், சேவாஸ்டேஜ் என்ற நாடகக் கம்பெனியை, நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம் நடத்திவந்தார். இவர் நடத்திய நாடகங்களில் பல, பின்னர் திரைப்படங்களாக உருவாகி வெற்றிபெற்றன. இவற்றில் ஒன்றான ‘நாலுவேலி நிலம்’ என்ற திரைப்படத்திலிருந்து ஒரு அருமையான நாட்டுப் புற மெட்டை திருச்சி லோகநாதனும், எல்.ஆர்.ஈஸ்வரியும், கே.வி.மகாதேவன் இசையில் பாடுகிறார்கள்.  பாடலை, கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதியிருக்கிறார்.

      கே.வி.மகாதேவன், தன்னுடைய வழக்கமான பாணியிலிருந்து சற்று விலகி, இந்தப் பாட்டில் தாளத்திற்கு ‘டேப்’ வாத்தியத்தையும், பியானோவையும் உபயோகித்திருக்கிறார்! சுருதி சுத்தமான, துல்லியமான இரு குரல்களின் இன்னிசை, இனி உங்களுக்கு:




4 comments:

  1. ஐம்பத்து மூன்றாவது பதிவுக்கு இப்போதும் ஐம்பதாவது பதிவுக்குக் கொஞ்சம் தாமதமாகவும் வாழ்த்துக்கள். நீங்கள் ரசித்த பாடல்கள் என்றால் நூறு என்ன ஐநூறு பாடல்களைக்கூட அதன் உண்மையான சிறப்பம்சங்களுடன் சொல்லிச்செல்ல முடியும். தொடருவோம்.

    ReplyDelete
  2. Replies
    1. சிட்டுக்குருவியின் பெருமகிழ்ச்சிக்கு என் நன்றிகள்!

      Delete
  3. நன்றி,அமுதவன்! காலத்தால் அழியாத பாடல்கள், நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கக் காத்திருக்கின்றன. அவை எல்லாமே நல் முத்துக்கள்தான். மூழ்குவது ஒன்றே நாம் செய்ய வேண்டியது. ஐம்பது, நூறு என்ற வெறும் எண்ணிக்கைகளைக் கடக்க, உங்களைப் போன்ற (பதிவிட்டு) உந்துதல் தரும் ரசிகர்களுக்கும், மற்றும் சைலண்டாக ரசித்துக்கொண்டிருக்கும் மற்ற ரசிகத் தோழர்களுக்கும் என் தலைதாழ்ந்த வணக்கமும், நன்றியும். இந்த இனிமையான பயணத்தைத் தொடருவோம், வாருங்கள்!

    ReplyDelete