Thursday, May 10, 2012
இன்னுமொரு காலங்கடந்த பாடல்!
1959ல் வெளிவந்த ‘மாதவி’ எனும் குறைந்த பட்ஜெட் திரைப் படத்தில், இன்று எஞ்சியிருப்பது, இன்று நீங்கள் ரசிக்கப்போகும் இந்தப் பாடல் ஒன்று மட்டுமே. அதனாலேதான் இது, ’காலங்கடந்த பாடல்கள்’ வரிசையில் சேருகிறது!
இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர், ஒரிஜினல் நாட்டுப்புறப் பாடல்களை அள்ளி வழங்கிய, திரையிசைத்திலகம் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, கே.வி.மகாதேவன். இந்த அற்புதமான பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை!
ஒரு பியானோ, இரண்டு குழல்கள் (ஒன்று சாதாரணம், மற்றொன்று மெட்டல் - உச்சஸ்தாயியில் ’கீச்’ என்று ஒலிப்பது), ஓரிரு இடங்களில் வயலின்கள், மற்றும் தாளத்திற்கு இரண்டு டேப்கள் (டேப் என்ற தாள வாத்தியத்தைத் தமிழில் ‘பறை’ என்பார்கள். ‘பாவமன்னிப்பு’ படத்தில் சிவாஜி அறிமுகமாகும் ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ பாடலுக்கு இந்த வாத்தியத்தைக் கையில் வைத்துக் கொண்டு அற்புதமாக நடிப்பாரே அதேதான்!) இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு சாம்ராஜ்யம் நடத்தியிருக்கிறார், மகாதேவன்! இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள். தபலாவின் தாளத்திற்குப் பேர் போன மகாதேவன், இந்தப் பாடலுக்கு அதை உபயோகப்படுத்தவே இல்லை! இத்தனைக்கும், எல்லா இசையமைப்பாளர்களும் ஒரு தபலாவின் ஒலியே போதும் (அல்லது அதிகம்) என்று கருதிய வேளையில், அநேகமாக அவர் மெட்டமைத்த எல்லாப் பாடல்களுக்கும் இரண்டு தபலாக்களை அநாயாசமாக உபயோகித்து வெற்றிகண்டவர், மகாதேவன். (இப்போது தெரிகிறதா, அவர் தபலா தாளத்தின் ரகசியம்?!)
பியானோ வாத்தியம், இந்தப் பாடலில், பின்னணியில் தாளத்திற்கான ‘கார்ட்ஸ்’ ஒலிக்காக மட்டுமே உபயோகிக்கப் படுகிறது. நாட்டுப் புறப் பாடலுக்கான முக்கிய லக்ஷணமான ஒரே சீரான மெட்டிற்குக் தகுந்த அணைப்பாக டேப்பும், பாட்டின் முதலிலும் நடுவிலும் அடிக்கடி வரும் இரு குழல்களின் ’பிட்’டும், துல்லியமாக, சுருதி சுத்தமாக ஒலிக்கும் ஒரு அசல் ஆண் குரலும், குழைவான பெண்குரலும்..... பாடலை எழுதியவரையும், மெட்டுப் போட்டுப் பாடலை முழுமையாக்கியிருக்கும் இசையமைப்பாளரையும் எப்படிப் பாராட்டுவது என்ற பெரிய தர்மசங்கடத்தில் உங்களை ஆழ்த்தவில்லையா? அப்படி என்றால், இன்னும் சில முறைகள், - இரவில் - தனியே இந்தப் பாடலைக் கேளுங்கள்! பிறகு அந்த மேன்மையான படைப்பாளிகளுக்கு நன்றி சொல்வீர்கள்!
இதோ, நீங்களும், தோட்டக்காரச் சின்ன மாமனும்:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment