Wednesday, November 9, 2011

கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு!




இன்று, இன்னொரு மென்மையான, செவிகளுக்கு மிகச் சுகமான குரல் ஒன்றைக் கேட்கப்போகிறோம்.

சென்ற தலைமுறையில் கர்நாடக சங்கீத மேடைகளில் முதன் முதலில் ஜோடியாகப் பாடிப் பிரபலமடைந்த பெண் கலைஞர்கள், ராதாவும், ஜெயலக்ஷ்மியும். இவர்களில் ஜெயலக்ஷ்மி மட்டும் பல பாடல்களைத் திரையில் பின்னணியாகப் பாடியிருக்கிறார். இவரின் குரல், நாம் ஏற்கனவே கேட்டிருக்கும் டி.எஸ்.பகவதியின் குரலை ஒத்திருக்கும்.

இன்று இவர் பாடியுள்ள இரண்டு பாட்டுக்களை (ஒன்றரை என்றும் சொல்லலாம்! ஏனென்றால் இதில் ஒரு பாட்டு ஒன்றரை நிமிடமே வருகிறது!) ரசிக்கவிருக்கிறோம். இவர் தனியாகப் பாடியிருக்கும் மனமே முருகனின் மயில் வாகனம்என்ற பாட்டுக்கு (மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்திற்காக) எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாட்டு, ஹிந்தோளம் எனும் ராகத்தில் அமைந்திருக்கிறது. இந்த சுத்தமான கர்நாடக சங்கீதப் பாடலில் வீணை, ஜெயலக்ஷ்மியின் குரலுக்குத் துணை போகிறது.

இதைக் கேட்கும் போதே உங்களுக்கு இன்னொரு மிகப்பிரபலமான பாட்டான ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ (பாக்யலட்சுமி) நினைவுக்கு வரும்! இந்தப் பாடலும், சுசீலா (மணாளனே மங்கையின் பாக்கியம் படத்தில்) பாடியிருக்கும் ‘அழைக்காதே, நினைக்காதேஎன்ற பாடலும் இதே ஹிந்தோள ராகத்தைத தழுவியவைதான். இந்த ‘அழைக்காதே பாடலுக்கு இசை அமைத்தவர் ஆதிநாராயணராவ். இவர் அஞ்சலிதேவியின் கணவர். இவரைப் பற்றிய ஒரு அதிசயமான தகவல்: இவர் காது கேட்கும் திறனை இழந்தவர்! ஆனாலும் ஒரு அற்புதமான இசையமைப்பாளர்!

ஜெயலக்ஷ்மியின் மென்மையான குரலோடு, கம்பீரமான டி.எம். சௌந்திரராஜனின் குரல் சேர்ந்தால்? நமது செவிகளுக்கு விருந்தாக ஒரு நல்ல அருமையான பாடல் கிடைக்கும்! அந்தப் பாடல்தான் ‘கண்ணுக்குள்ளே உன்னைப் பாருஎனும் டூயட். மரகதம்திரைப்படத்தில் இடம் பெற்றது. (இதே படத்தில்தான் சந்திரபாபு-ஜமுனாராணி பாடியிருந்த பிரபல ‘குங்குமப் பூவேபாடலும் வந்தது) பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையில், படத்தில் சிவாஜியும் பத்மினியும் பாடுவதாக வரும். (சி.ஆர்.சுப்பராமனிடம் சேருவதற்கு முன்னர், எம்.எஸ்.விஸ்வநாதன் நாயுடுவிடம்தான் உதவியாளராக இருந்தார்). கண்ணுக்குள்ளேபாட்டு பாரம்பரிய இசையென்றாலும், பியானோவையே கார்ட்ஸாக உபயோகித்திருக்கிறார்கள். தாளம் கூட உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான வால்ட்ஸ் (Waltz) தான்.

இந்த இரட்டை விருந்தை அனுபவிக்க வாருங்கள்:

MANAME1.mp3 by Krishnamurthy80

- Kannukkulle!!s -- MARAGADHAM.mp3 by Krishnamurthy80

மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

1 comment:

  1. மனமே முருகனின் மயில்வாகனம் பாடலை எழுதியவர் ஞாபகமிருக்கிறதா?
    கொத்தமங்கலம் சுப்பு.

    ReplyDelete