Sunday, October 2, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பனிரெண்டு)


ஒரு சுகமான, மிகப்பழைய டூயட், உங்கள் ரசனைக்காக இன்று வருகிறது. இதுவரை நாம் கேட்காத இருவர் சேர்ந்து பாடியிருக்கிறார்கள்.

இந்தத் தலைமுறையினர் பலருக்கு, கே.ஆர்.ராமசாமியைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கணீரென்ற குரலுடைய நாடக, திரைப்படக் கதாநாயகன். நேஸல் வாய்ஸ்எனப்படும், (கொஞ்சம் மூக்கால் பாடுவதுபோல் இருக்கும்) சுகமான குரல் கொண்டவர். அறிஞர் அண்ணாவின் இனிய நண்பர். அவரிடமிருந்து ‘நடிப்பிசைப் புலவர்என்ற பட்டம் பெற்றவர். தீவிர முற்போக்காளர். (ஒரு சமயம் கே.ஆர்.ஆருக் காகவே அண்ணா ஒரே இரவில் எழுதிய நாடகந்தான் ‘ஓர் இரவு’! இது பின்னாளில் ஏவிஎம் நிறுவனத்தின் திரைப்படமாகவும் வந்தது. நமது ‘குழந்தைஎம்.எஸ். ராஜேஸ்வரியின் குரலில், துன்பம் நேர்கையில்என்கிற பாரதிதாசனின் அருமையான பாடல் இப்படம் மூலம்தான் பிரபலமடைந்தது.)

நாடகக் கலைமீது தீராப் பற்று கொண்டவர் கே.ஆர்.ஆர். தமிழகம் முழுவதிலும் தன்னுடைய சொந்த நாடகக் கம்பெனியின் மேடை நாடகங்களை நடத்தி (அப்போதுதான் தோன்றியிருந்த) தி.மு.கழகத்தின் கொள்கைகளை விளக்குவதில் தன் வாழ்நாளையும் பொருளையும் செலவிட்டவர். எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்களுக் கெல்லாம் திரைத்துறையிலும், அரசியலிலும் முன்னோடி.

இவருடன் ஜிக்கி என்றழைக்கப் பட்ட பி.ஜி.கிருஷ்ணவேணியும் சேர்ந்து பாடியுள்ள பாடலிது . (இவரைப் பற்றி அடுத்த பதிவில்!). பாடல், மாடர்ன் தியேட்டர்ஸாரின் சுகம் எங்கே? என்ற திரைப் படத்தில் இடம் பெற்றது. இப் படத்தின் நாயகர்கள்: கே.ஆர்.ராமசாமியும், சாவித்ரியும்! கதை, வசனம்: கண்ணதாசன் மற்றும் ஏ.கே.வேலன். பாடல்கள்: கண்ணதாசனும், மருதகாசியும். (இன்றைய பாடலை, இந்த இருவரில் யார் எழுதியது என்பது குறிப்பாகத் தெரியவில்லை). இசை: அப்போது இன்னமும் ‘மெல்லிசை மன்னர்கள்ஆகாத, விஸ்வநாதன்-ராமமூர்த்தி!

அவர்களின் திரைஇசை வாழ்வின் ஆரம்பகாலத்தில் வந்த படம், ‘சுகம் எங்கே?ஆயினும் பாடல் முழுவதிலும் அவர்களின் பிரத்தியேகக் கற்பனைகள் நிறைய விரவி இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். வழக்கம் போல மெட்டுக்குத் தான் முதல் இடம். என்றாலும், மாண்டலின், வயலின்கள், கிடாரின் கார்ட்ஸ்,தபலா இவற்றின் பங்களிப்பு, கோர்விசையில் அப்போதே அவர்களின் பாணியை உறுதிப் படுத்தியிருக்கிறது. முதலிலிருந்து முடிவு வரை எந்த வித நெருடலும் இல்லாத மெட்டின் சீரான போக்கு என்கிற (மன்னர்களின்) வெற்றி ரகசியமும் அப்போதே ஆரம்பித்திருக்கிறது! முரண் குரல்களான ராமசாமியின் கம்பீரக் குரலும், ஜிக்கியின் மென்குரலும் பரவசப்படுத்துகின்றன.

இங்கே கொடுத்திருக்கும் பாடலின், ஒலிப்பதிவு துல்லியமாக இல்லை யெனினும் பாடலை ரசிக்க முடிகிறது. கேளுங்கள்:

Senthamizh nattu solayile by Krishnamurthy80

மீண்டும் அடுத்த பாடலில் சந்திப்போம், நண்பர்களே!

4 comments:

  1. எப்படி இப்படி அரிய தகவல்களை
    சேகரிக்கிறீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது
    இசைக் கருவிகள் குறித்த உங்கள் ஞானமும்
    சொல்லிச் செல்லும் விதமும் பிரமிப்பூட்டுகிறது
    அருமையான பாடலை கேட்கக் கொடுத்தமைக்கு
    மிக்க நன்றி

    ReplyDelete
  2. வருகைக்கும்,ரசிப்புக்கும் நன்றி, நண்பரே! அப்போது ஊன்றி ரசித்தவற்றை வெளிச் சொல்ல வாய்ப்புகள் இருந்ததில்லை. இப்போது, உங்களைப் போல ஒத்த ரசனை உள்ளவர்களின் உந்துதல்கள் என் போன்றவர்களுக்குப் பெரும் பலம்!

    ReplyDelete
  3. மேலும் ஒரு அருமையான பாடலை நினைவுபடுத்தியிருப்பமைக்கு நன்றி. இந்தப் பாடலை எழுதியவர் மருதகாசி.ஜிக்கியின் மென்குரலில் அன்றைக்கு அடிக்க ஆரம்பித்த தென்றல் இன்னமும் தொட்டுத் தழுவுவதுதான் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மேஜிக்.

    ReplyDelete
  4. நன்றி, அமுதவன்! நாம் அடிக்கடி நன்றி பாராட்டிக்கொள்வது, என்னை நானே பாராட்டிக் கொள்வது போல இருக்கிறது! இருப்பினும்....!

    ReplyDelete